ரோட்டை சீரமைக்காததை கண்டித்து மாணவ-மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூர் அருகே ரோட்டை சீரமைக்காததை கண்டித்து மாணவ-மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-28 22:45 GMT
அந்தியூர்,

அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடைமேடு பகுதியில் செல்லும் ரோட்டுக்கு நேற்று காலை 8 மணிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் பழுதடைந்து காணப்படும் ரோட்டை சீரமைக்கக்கோரி, அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்றை சிறைபிடித்தனர். மேலும், திடீரென சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் மாணவ-மாணவிகளும் கலந்துகொண்டு ரோட்டில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், மைக்கேல்பாளையம் முதல் ஓடைமேடு வரை செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்வதோடு, அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதேபோல் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். ஆகவே பழுதடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன் கூறுகையில், ‘மைக்கேல்பாளையம்-ஓடைமேடு வரை குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டம் மற்றும் சிறைபிடித்த பஸ்சை விடுவித்துவிட்டு காலை 9.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலைமறியலால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்