தாசில்தார்களை வேறு மாவட்டத்துக்கு மாற்ற எதிர்ப்பு: சேலத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தாசில்தார்களை வேறு மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி, சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த 24 தாசில்தார்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார்.
இந்தநிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் தாசில்தார்களை, சேலத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், தாசில்தார்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்தும் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அர்த்தனாரி, மாவட்ட இணை செயலாளர்கள் வள்ளிதேவி, ஜாகீர் உசேன், பொருளாளர் முருகபூபதி உள்பட வருவாய்த்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, அவர்கள் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்தும், வேறு மாவட்டங்களுக்கு தாசில்தார்களை இடமாற்றம் செய்யக்கூடாது எனக்கூறியும் கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-
வழக்கமாக தேர்தல் வந்தால் தாசில்தார்களை மாவட்டத்திற்குள் ஏதாவது ஒரு பகுதியில் இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதுதான் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது எங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு தாசில்தாரும் கடன் வாங்கி செலவு செய்வோம். அந்த பணத்தை தேர்தல் ஆணையம் வழங்குவதற்கு 3 மாதங்கள் ஆகிவிடும். வெளி மாவட்டத்திற்கு மாற்றிவிட்டால் அந்த தொகுதியின் நிலவரம், பதற்றமான வாக்குச்சாவடி எது? என்பதே எங்களுக்கு தெரியாது. தேர்தல் சமயத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல முடியாது. எனவே, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி 2 நாட்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.