கோவில்பட்டி அருகே ரூ.2 கோடியில் புதிய சாலை அமைக்க பூமி பூஜை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி அருகே ரூ.2 கோடியில் புதிய சாலை அமைப்பதற்கு பூமி பூஜையை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-28 22:15 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே இடைசெவலில் இருந்து குருமலை வரையிலும் ஊரக கிராம சாலை திட்டத்தில் ரூ.2 கோடி செலவில் புதிய தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, புதிய சாலை அமைப்பதற்கு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் (பொறுப்பு) சங்கர நாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், தலைமை ஆசிரியை (பொறுப்பு) ரூத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் முன்பு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம், கல்லூரி செயலாளர் கண்ணன், பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

கயத்தாறு ஜவகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ், நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்