‘மருத்துவ துறையில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது’ செந்தில்நாதன் எம்.பி. பேச்சு
மருத்துவ துறையிலும், பல்வேறு சிகிச்சை யிலும் தமிழகம் சாதனை படைத்து வருகிறது என்று செந்தில்நாதன் எம்.பி. கூறினார்.
காரைக்குடி,
காரைக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் 2 பயனாளிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தின்கீழ் தலா ரூ.18 ஆயிரம் பெறுவதற்கான ஆணையை அவர் வழங்கினார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் பொது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர்கள் ஆனந்தராஜ், கமலேஷ்வரன், பிரவீன்குமார், கூட்டுறவு வங்கி இயக்குனர் மெய்யப்பன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக விழாவில் செந்தில்நாதன் எம்.பி. பேசியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பொது சுகாதாரத்துறையில் தனிக்கவனம் செலுத்தி அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார். மேலும் அவர் செயல்படுத்திய ஒவ்வொரு திட்டத்தின் வெற்றியின் காரணமாக இன்று தமிழக பொது சுகாதாரத்துறை தேசிய விருது பெற்றுள்ளது. அதேபோல் பல்வேறு திட்டங்கள் மூலம் மருத்துவத்துறையிலும், ஒவ்வொரு சிகிச்சையிலும் தமிழகம் சாதனை படைத்து வருகிறது. ஜெயலலிதா வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின்கீழ் இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இதுபோன்ற மருத்துவ முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.