கல்விச்சீர் வழங்கும் விழா நடத்துவதற்காக 162 பள்ளிகளுக்கு தலா ரூ.1,500 நிதி ஒதுக்கீடு அதிகாரி தகவல்

கல்விச்சீர் வழங்கும் விழா நடத்துவதற்காக 162 பள்ளிகளுக்கு தலா ரூ.1,500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக கல்வி அதிகாரி தெரிவித்தார்.

Update: 2019-02-28 22:15 GMT
கரூர், 

ஏழை, எளிய மற்றும் வறுமையில் வாடும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் ஏற்படுத்தினார். அதுவே எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டமாக உருவெடுத்து மாணவர்களின் வயிற்று பசியை போக்கியது. தற்போது பள்ளிக்கல்வித்துறையில் தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டு வரும் வேளையில், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் தாமாக முன்வந்து பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்கி வருவது பரவலாக நடந்து வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அரசு பள்ளியின் கட்டமைப்பினை மேம்படுத்த வாய்ப்பு ஏற்படுவதோடு, பெற்றோருக்கும்-பள்ளிகளுக்கும் இடையே சுமுக உறவு ஏற்படுகிறது. அந்த வகையில் கரூர் லைட்அவுஸ் கார்னரிலுள்ள நகராட்சி குமரன் அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று கல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது. இதையொட்டி ஊர்பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தேயைான பீரோ, குடம், வாளி, நூலக புத்தகங்கள், குறிப்பேடுகள், கடிகாரம், தேசத் தலைவர்கள் புகைப்படங்கள் மற்றும் கேரம் பலகை உள்பட விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து லைட்அவுஸ் கார்னலிருந்து, குமரன் பள்ளிக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கொடுத்தனர்.

பின்னர் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை கவுரி தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, வட்டார கல்வி அதிகாரிகள் சந்திரிகா, குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அதிகாரி மகாலிங்கம் பேசுகையில், கல்விச்சீர் வழங்கும் விழா என்பது அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியமான ஒன்றாகும். எனவே கல்விச்சீர் வழங்கும் விழா நடத்த கரூர் மாவட்டத்தில் 141 தொடக்கப்பள்ளிகள், 21 உயர்நிலை பள்ளிக்ள என 162 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.1,500 வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மற்றபடி பலரும் தாமாக முன்வந்து தேவையான பொருட்களை கொடுத்து உதவுவதால் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுக்கு அது உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்