எல்லையில் பதற்றம் எதிரொலி, கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
எல்லையில் பதற்றம் நிலவுவதால் கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கோவை,
காஷ்மீரில் 40 துணை ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதுபோன்று காஷ்மீர் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் எல்லையில் பதற்றம் நிலவுவதால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவருமே தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். அதுபோன்று கோவை மாநகர போலீசாரும் விமான நிலையத்தை ஒட்டி உள்ள பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை மற்றும் சூலூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கோவை வருகிறார்.
அவரது வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் கூறினார்கள்.