கச்சிராயப்பாளையம் அருகே அறுவடை எந்திரம் மோதி விவசாயி பலி
கச்சிராயப்பாளையம் அருகே அறுவடை எந்திரம் மோதியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள செம்படாக் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54), விவசாயி. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விளை நிலம் உள்ளது. அந்த நிலத்தில் இளங்கோவன் நெல் சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் அறுவடை எந்திரம் மூலம் இளங்கோவனின் விளை நிலத்தில் நேற்று நெல் அறுவடை செய்யும் பணி நடந்தது.
அப்போது இளங்கோவன் அறுவடை எந்திரத்தின் பின்புறமாக சென்று நெல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். இதை கவனிக்காத டிரைவர் திடீரென அறுவடை எந்திரத்தை பின்னோக்கி இயக்கினார். இதில் அறுவடை எந்திரம் இளங்கோவன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான இளங்கோவன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.