புளியந்தோப்பில் ‘கானா’ பாடகரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி 4 பேர் கைது

‘கானா’ பாடகரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 ஆயிரம் வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-28 22:45 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் கால்வாய்கரை முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 53). இவர், மேடை கச்சேரிகளில் ‘கானா’ பாடல் பாடி வருகிறார். நேற்று காலை இவர், ஓட்டேரியில் அடுத்த வாரம் நடைபெற உள்ள கச்சேரியில் பாடுவதற்காக முன்பணமாக ரூ.15 ஆயிரம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அம்பேத்கர் கல்லூரி சாலை மற்றும் பிரைட்டன் சாலை சந்திப்பு அருகே அவர் நடந்து வந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் ‘கானா’ பாடகர் ஜோசப்பை வழிமறித்து அவரிடம் இருந்த பணத்தை தரும்படி கேட்டனர்.

ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் தங்கள் கையில் வைத்திருந்த பெரிய கத்தியை காட்டி மிரட்டி ஜோசப்பிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோசப், கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

உடனே அந்த கும்பல், பொதுமக்களையும் கத்தியை காட்டி மிரட்டியபடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலை தேடி வந்தனர்.

இந்தநிலையில் பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த கன்னிகாபுரம் எம்.எஸ். முத்து நகரை சேர்ந்த கபாலி என்ற ராஜேஷ் (30), ஜாகீர் உசேன்(21), சாமுவேல் (19) மற்றும் எண்ணூரைச் சேர்ந்த பாண்டியன் (50) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், கைதான 4 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கோகுல் (23) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்