முற்றிலும் குளிரூட்டப்பட்ட சென்னை-பிகானீர் அனுராத் எக்ஸ்பிரஸ் ரெயில்: மதுரையில் இருந்து இன்று முதல் இயக்கம்

முற்றிலும் குளிரூட்டப்பட்ட சென்னை- பிகானீர் அனுராத் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரையில் இருந்து இன்று முதல் இயக்கப்பட உள்ளது.

Update: 2019-02-27 23:23 GMT
மதுரை,

சென்னை சென்டிரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் வரை இயக்கப்பட்டு வந்த முற்றிலும் குளிரூட்டப்பட்ட அனுராத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே, மதுரையில் இருந்து முதல் ரெயில் சேவை இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது.

மதுரை-பிகானீர் வாராந்திர அனுராத் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22631) இன்று (வியாழக்கிழமை) காலை 10.45 மணிக்கு மதுரை ரெயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது. சனிக்கிழமை மாலை 5.45 மணிக்கு பிகானீர் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மதுரையில் இருந்து இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் பிகானீர் ரெயில்நிலையத்தில் இருந்து மதுரைக்கான ரெயில் சேவை வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.50 மணிக்கு இந்த ரெயில்(வ.எண்.22632) பிகானீர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 9.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில்நிலையம் வந்தடைகிறது. அங்கிருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது.

இந்த ரெயில் கொடைரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில், ஒரு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, 4 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 11 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், ஒரு உணவு தயாரிக்கும் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

மதுரையில் இருந்து சென்னைக்கு முன்பதிவு கட்டணமாக 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் ரூ.815, 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் ரூ.1,150, முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் ரூ.1,940 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்