திருவெண்ணெய்நல்லூர் அருகே கல்லூரி மாணவி கடத்தல்- 15 வீடுகள் சூறை
திருவெண்ணெய்நல்லூர் அருகே கல்லூரி மாணவி கடத்தல் விவகாரத்தில் 15 வீடுகள் சூறையாடப்பட்டன. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் காலனியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் திருமூர்த்தி (வயது 22). இவர் கடலூரில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய மாணவி ஒருவர் எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 21-ந் தேதி கல்லூரிக்கு சென்ற இருவரும் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தபுகாரில் தங்கள் மகளை திருமூர்த்தி கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவி எங்கு இருக்கிறார், அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. இதுபற்றி மாணவியின் பெற்றோர், திருமூர்த்தியின் பெற்றோரிடம் சென்று முறையிட்டும் உரிய பதில் இல்லை.
இந்நிலையில் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் சிலர், ஆனத்தூர் காலனி பகுதிக்குள் சென்று அங்கிருந்த வீடுகளில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் 15 பேரின் வீடுகளில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அதேபகுதியில் இருந்த 2 சரக்கு வாகனங்கள், 2 ஆட்டோக்கள், ஒரு லாரியின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலின்போது அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகள் திவ்யா (19), சிவா மகள் அவந்திகா (13) மற்றும் கண்மணி (26) ஆகியோர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக, அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது மற்றும் போலீசாரும், உளுந்தூர்பேட்டை தாசில்தார் இளங்கோவனும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதனிடையே ஆனத்தூர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்றாக அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இருந்தபோதிலும் இந்த சம்பவத்தினால் அந்த கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நீடித்து வருவதால் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வீடுகளை சூறையாடியதாக மாணவியின் தரப்பை சேர்ந்த 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.