டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: அம்பை தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அம்பை தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
அம்பை,
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது வைராவிகுளம் கிராமம். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்காக புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் கடையை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த வைராவிகுளம், ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, ஆலடியூர், கீழஏர்மாள்புரம், பாப்பான்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், ஜமீன்சிங்கம்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன், பாஸ்கர் தலைமையில் அம்பை தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அம்பை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் வைராவிகுளத்தில் அரசு டாஸ்மாக் கடையை திறக்க கூடாது.
இதனால் எங்கள் பகுதி இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி அவர்களின் வாழ்க்கை சீரழிந்து விடும் நிலை ஏற்படும் என்றனர். உடனே துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் கிராம மக்கள், கோரிக்கை மனுவை அவரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.