ஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் பக்கம் இருப்பதால்தான் அ.தி.மு.க. ஆட்சியை தினகரனால் கலைக்க முடியவில்லை வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி
ஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் பக்கம் இருப்பதால்தான் அ.தி.மு.க. ஆட்சியை தினகரனால் கலைக்க முடியவில்லை என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
தஞ்சாவூர்,
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- கூட்டணி குறித்து சில அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் மாறுபட்ட கருத்தை சொல்கிறார்களே?
பதில்:- எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் என்ன சொல்கிறார்களோ அது தான் கட்சியின் கருத்து. கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது.
கேள்வி:- 21 சட்டசபை தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க. விருப்பம் தெரிவித்து சில தொகுதிகளை கேட்பதால் தான் இழுபறி நடப்பதாக கூறப்படுகிறதே?
பதில்:- அது ரகசியம். அது குறித்து கூற முடியாது.
கேள்வி:- பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறாரே?
பதில்:- ஜெயலலிதாவின் ஆன்மா ஆட்சியை வழிநடத்துவதால் தான் 2 ஆண்டு களாக எங்கள் ஆட்சியை டி.டி.வி.தினகரன் கலைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. ஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் பக்கம் இருக்கிறது.
கேள்வி:- அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பிடிக்கவில்லை என கூறி சிலர் விலகிக்கொண்டு இருக்கிறார்களே?
பதில்:- ஒரு சிலரை மாற்று சக்திகள் பயன்படுத்து கிறார்கள். அவர்களுக்கு இவர்கள் பயன்படுகிறார்கள். இதனால் எந்த பாதிப்பும் இல்லை.
கேள்வி:- தொடர்ந்து விமர்சனம் செய்யும் கட்சியுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு பாதிக்காதா?
பதில்:- எந்த கட்சியாவது பிற கட்சியை விமர்சனம் செய்யாமல் இருந்து இருக்கிறதா? ஒரு கட்சியை சொல்லுங்கள் பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.