ஈரோட்டில் புதிய மேம்பாலத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார் தொண்டர்கள்–பொதுமக்கள் திரளாக பங்கேற்க எம்.எல்.ஏ.க்கள் வேண்டுகோள்

ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மேம்பாலத்தை முதல் –அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார். இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2019-02-27 23:15 GMT

ஈரோடு,

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலை வகிக்கிறார்.

தமிழக முதல் –அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு புதிய மேம்பாலத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார். மேலும் அவர் ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே முடிந்த திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் பேசுகிறார்.

விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வரவேற்று பேசுகிறார். முடிவில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா நன்றி கூறுகிறார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோர் வெளியிட்டு உள்ள கூட்டறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதா புதிய மேம்பாலம் கட்ட ரூ.58 கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கினார்.

அதைத்தொடர்ந்து முதல் –அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். தற்போது மேம்பாலம் கட்டும் பணி நிறைவடைந்து விட்டது. இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் –அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய பாலத்தை திறந்து வைக்கிறார். மேலும் அவர் ஈரோடு மாவட்டத்தில் ரூ.406 கோடி செலவில் முடிவுற்றுள்ள பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும் பேசுகிறார். இதற்கான விழா மேடை பிரப்ரோட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்காக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். இதேபோல் ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது. எனவே ஈரோட்டிற்கு இன்று (வியாழக்கிழமை) வருகை தரும் தமிழக முதல் –அமைச்சருக்கு, ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்