பிளஸ்–2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம் திருவள்ளூர் மாவட்டத்தில் 45 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்

பிளஸ்–2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 45 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

Update: 2019-02-27 22:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 19–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 20 ஆயிரத்து 580 மாணவர்களும், 22 ஆயிரத்து 107 மாணவிகள், 2,348 தனித்தேர்வர்கள் என மொத்தம் 45 ஆயிரத்து 35 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இவர்களுக்கு 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகள் 126 பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு ஒரு தனித்தேர்வு மையம் அமைக்கப்படுகிறது. பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் 28 மாணவர்களும், நேத்ரோதயா சிறப்பு பள்ளியில் 5 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

அதேபோல பிளஸ்–1 அரசு பொதுத்தேர்வு வருகிற 6–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 19 ஆயிரத்து 280 மாணவர்கள், 22 ஆயிரத்து 147 மாணவிகள் என மொத்தம் 41 ஆயிரத்து 427 பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு 119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று 10–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வருகிற 14–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 21 ஆயிரத்து 280 மாணவர்கள், 24 ஆயிரத்து 855 மாணவிகள் என மொத்தம் 46 ஆயிரத்து 135 பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு 167 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் 19 மாணவர்களும், நேத்ரோதயா சிறப்பு பள்ளியில் 3 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். புழல் மத்திய சிறையில் ஒரு தனித்தேர்வு மையம் அமைக்கப்பட்டு 51 சிறைவாசிகள் தேர்வு எழுத உள்ளனர்.

மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்போன், கால்குலேட்டர், கைக்கெடிகாரம், பென்டிரைவ் போன்றவற்றை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேர்வு தொடர்பான புகார்களை தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்