கலபுரகியில் ஒன்றாக பணியாற்றியபோது காதல் மலர்ந்தது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திருமணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் எளிமையாக நடந்தது
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காதல் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் கலபுரகியில் ஒன்றாக பணியாற்றியபோது காதலித்தனர். இவர்களின் திருமணம் உப்பள்ளியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் எளிமையாக நடந்தது.
மங்களூரு,
ஜார்கண்டை சேர்ந்தவர் உஜ்வல் குமார் கோஷ் (வயது 40). ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் பாகல்கோட்டையில் கிருஷ்ணா மேலணை திட்டத்தின் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு பிரிவு கமிஷனராக பணியாற்றி வருகிறார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் ஹெப்சிபா ராணி கோர்லபடி (38). இவர் உடுப்பி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான இவர்கள் நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் உப்பள்ளியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து எளிமையாக திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். மேலும், உப்பள்ளி-தார்வார் மாவட்ட கலெக்டர் தீபா சோழன் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இவர்களின் திருமணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டனர். பின்னர் அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
உஜ்வல் குமார் கோஷ் 2008-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். ஹெப்சிபா ராணி கோர்லபடி 2011-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். உஜ்வல் குமார் கோஷ், பீதர் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாகவும், ஹெப்சிபா ராணி கோர்லபடி பசவகல்யாண் உதவி கலெக்டராகவும் பணியாற்றினர்.
பின்னர் உஜ்வல் குமார் கோஷ், கலபுரகி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். ஹெப்சிபா ராணி கோர்லபடி, கலபுரகி மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றினார். அவர்கள் ஒன்றாக பணியாற்றியபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் தங்கள் காதல் விவகாரத்தை பெற்றோர்களிடம் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் எளிமையாக திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உப்பள்ளியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தனர். அப்போது ஹெப்சிபா ராணி கோர்லபடி, உப்பள்ளி-தார்வார் சீர்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் இயக்குனராக இருந்தார்.
கடந்த 7-ந்தேதி தான் ஹெப்சிபா ராணி கோர்லபடி, உடுப்பி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். தற்போது இருவருக்கும் விடுமுறை கிடைத்ததால் அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் திருமணத்தை எளிமையாக நடத்தினர்.