கயத்தாறு உப்பாற்றின் குறுக்கே ரூ.3.85 கோடியில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கயத்தாறு உப்பாற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 85 லட்சம் செலவில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-26 21:30 GMT
கயத்தாறு,

கயத்தாறு-கழுகுமலை ரோடு அகிலாண்ட ஈசுவரி அம்மன் கோவில் அருகில் உப்பாற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 85 லட்சம் செலவில் புதிய உயர்மட்ட பாலம் அமைக் கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர், காப்புலிங்கம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

பின்னர் காப்புலிங்கம்பட்டி-வாகைதாவூர் ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் புதிய சாலை மற்றும் பாலம் அமைக்க பூமி பூஜை நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கூட்டுப்பண்ணை விலக்கில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டினார். முன்னதாக கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் செலவில் கலையரங்கம் மற்றும் ரூ.5 லட்சம் செலவில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ், யூனியன் ஆணையாளர்கள் முத்துகுமார், சீனிவாசன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுந்தரம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கருப்பசாமி, முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்