தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக மக்களை தேடி சென்று வரி வசூல் செய்யும் சேவை பேராவூரணியில் தொடங்கப்பட்டது
தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக மக்களை தேடி சென்று வரி வசூல் செய்யும் சேவை பேராவூரணியில் தொடங்கப்பட்டது.
பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, தனி அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குற்றாலிங்கம் ஆகியோர் ஆலோசனைப்படி, பேரூராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய வீட்டுவரி, சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக்கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி வசூலிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக மக்களை தேடி சென்று வரி வசூல் செய்யும் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பேராவூரணி பகுதியில் 2 ஆம்னி வேன்கள் மூலம் வரி வசூல் செய்யப்படுகிறது. இதில் மடிக்கணினி, பிரிண்டர், இன்வெர்ட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் வீடு தேடி சென்று வீட்டுவரி, சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்துவரி பெயர் மாற்றம் மற்றும் இதர சேவைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதற்கு தீர்வு காணப்படுகிறது.
இதுகுறித்து செயல் அலுவலர் பொன்னுசாமி, தலைமை எழுத்தர் சிவலிங்கம் ஆகியோர் கூறுகையில், பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலைப்பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் செய்ய 2 ஆம்னி வேன்கள் மூலம் வாரத்தில் 7 நாட்களும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை வசூல் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு பில் கலெக்டர், இரண்டு பணியாளர்கள் வரி வசூலில் ஈடுபடுகின்றனர் என்றார்.