நாட்டுப்படகுகளுக்கு எந்திரங்கள் வாங்க 40 சதவீத மானியம் கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
நாட்டுப்படகுகளுக்கு எந்திரங்கள் வாங்க 40 சதவீத மானியம் வழங்கப்படும் என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் 2018–19–ம் ஆண்டில் பாரம்பரிய மீன்பிடி கலன்களை எந்திரமாக்கும் திட்டத்தின்கீழ் நாட்டுப்படகுகளுக்கு வெளிபொருத்தும் மற்றும் உட்பொருத்தும் எந்திரங்களை வாங்க ஏதுவாக பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. 10 மீட்டர் நீளத்திற்கு உட்பட்ட கண்ணாடி நாரிழைப்படகு வெளி மற்றும் உட்பொருத்தும் எந்திரம், 400 கிலோ எடையுள்ள வலை ஆகியவை அடங்கிய ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களுக்கு பயனாளியின் பங்களிப்பு தொகை 60 சதவீதத்தை அதாவது ரூ.2.40 லட்சத்தை வழங்க வேண்டும்.
மீதமுள்ள 40 சதவீத தொகையான ரூ.1.60 லட்சம் மத்திய–மாநில அரசுகளின் சார்பில் மானியமாக வழங்கப்படும். இதேபோல 500 கிலோ முதல் 1000 கிலோ வரை கொள்ளளவு கொண்ட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 2 குளிர்காப்பு பெட்டிகளுக்கு மத்திய–மாநில அரசுகளின் மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற பயனாளி நாட்டுப்படகு உரிமையாளராகவோ அல்லது இணை உரிமையாளராகவே இருக்கவேண்டும். முழு நேர மீனவராக இருத்தல் வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராகவும், பதிவு உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை அவரவர் விவகார எல்லைக்கு உட்பட்ட மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.