இளம் குற்றவாளிகள் அதிகரிப்பு: மது விற்பனைக்கு ஆதார் கார்டை ஏன் கட்டாயமாக்கக்கூடாது? மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்வி
‘‘இளம் குற்றவாளிகள் அதிகரிக்கின்றனர், எனவே மது விற்பனைக்கு ஆதார் கார்டை ஏன் கட்டாயமாக்கக்கூடாது?’’ என்று மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்வியை எழுப்பியது.
மதுரை,
மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் நடத்துவதற்கு கடந்த 21–ந்தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வருகிற 1–ந்தேதி கடைசி தேதி எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை டெண்டர் விண்ணப்பங்களை நேரிலோ, இணையதளம் மூலமாகவோ டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுப்ப முடியவில்லை. பார் டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்து, வெளிப்படைத்தன்மையுடன் டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கிருபாகரன், “மதுக்கடைகளில் சிறு வயதுடையவர்களுக்கும் மது விற்கின்றனர். இதனால் இளம் குற்றவாளிகள் அதிகரிக்கின்றனர். எனவே சிறுவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதை அரசு தடுக்க வேண்டும். மேலும் பள்ளி மாணவ–மாணவிகள் கூட சீருடை அணிந்து மது குடிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இந்த அவலத்தை போக்குவதற்குரிய பொறுப்புணர்ச்சி அரசுக்கு தேவை“ என்றார்.
பின்னர், மது விற்பனையை ஒழுங்குபடுத்த, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு ஆதார் கார்டை ஏன் கட்டாயம் ஆக்கக்கூடாது? தற்போதைய நேரத்தை மாற்றி, மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என டாஸ்மாக் கடைகளின் நேரத்தை ஏன் குறைக்கக்கூடாது?
டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் அனைத்தையும் ஏன் மூடக்கூடாது?’’ என கேள்விகள் எழுப்பினார்.
விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 12–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.