தாளவாடி வனப்பகுதியில் 5 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது

தாளவாடி வனப்பகுதியில் 5 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இலை, தழைகளை பயன்படுத்தி வனத்துறையினர் தீயை அணைத்து வருகிறார்கள்.

Update: 2019-02-26 22:30 GMT

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து உள்ளன. செடி, கொடிகள் கருகி உள்ளன.

இந்த நிலையில் கடந்த 22–ந் தேதி தாளவாடி மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட மூக்கன்பாளையம் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென தமிழக வனப்பகுதிக்கும் பரவியது. தாளவாடி, பாலப்படுக்கை, ஜீர்கள்ளி, தலமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட நெய்தாளபுரம், கோடிபுரம், கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கெத்தேசால் ஆகிய வனப்பகுதிகளில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

மலையின் உச்சியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிகிறது. எனவே தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் வேறு வழியை கையாண்டார்கள்.

அதன்படி தாளவாடி, கேர்மாளம், தலமலை வன ஊழியர்கள் 42 பேர் காட்டுத்தீ பற்றி எரிந்த இடத்துக்கு நடந்து சென்றார்கள். பிறகு இலை, தழைகளை கட்டுகளாக கட்டி தீயை அணைக்க தொடங்கினார்கள். 3 நாட்களாக அவர்கள் மேற்கொண்ட பணிக்கு நல்ல பலன் கிடைத்தது. அதாவது 5–வது நாளான நேற்று 70 சதவீத தீ கட்டுக்குள் வந்தது. எஞ்சிய தீயையும் அணைத்து வருகிறார்கள்.

காட்டுத்தீ பற்றிய இடம் ஏற்கனவே காய்ந்திருந்தது. பச்சை புற்கள், இலை, தழைகள் இல்லாததால் அந்த பகுதியில் இருந்த மான், யானை உள்ளிட்ட விலங்குகள் மாயாறு மற்றும் தெங்குமரஹடா வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துவிட்டன. அதனால் இந்த காட்டுத்தீயில் விலங்குகள் எதுவும் பலியாகவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வனப்பகுதியில் ஆங்காங்கே காட்டுத்தீ பற்றி வருகிறது. அதனால் வனப்பகுதி அருகே குடியிருக்கும் கிராம மக்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை காட்டுக்குள் எடுத்துச்செல்லவேண்டாம் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்