மகாபாரதத்தில் அர்ஜூனனைபோல யூகத்தை உடைத்து தேர்தலில் வெற்றிக்கனியை பெறுவோம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

மகாபாரதத்தில் அர்ஜூனனைபோல யூகத்தை உடைத்து தேர்தலில் வெற்றிக்கனியை பெறுவோம் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2019-02-26 23:30 GMT

ஈரோடு,

ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மேம்பாலத்தை திறந்து வைக்கவும், பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை) ஈரோட்டுக்கு வருகிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் ஈரோடு பிரப் ரோட்டில் நேற்று மாலை ஆய்வு செய்தனர்.

அதன்பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28–ந் தேதி (நாளை) மாலையில் ஈரோட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வருகிறார். இது மாபெரும் சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக அமைய உள்ளது. இதற்கான விழா ஈரோடு பிரப் ரோட்டில் நடக்கிறது. இங்கேயே விழா மேடையும் அமைக்கப்பட உள்ளது.

ஈரோடு மேட்டூர் ரோட்டில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து முடிவு எடுப்பார். நலத்திட்டங்களை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் நிறைவேற்றக்கூடாது. இதுதான் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. இந்த விதிமுறைக்கு உள்பட்டுதான் நாங்கள் பணிகளை மேற்கொள்கிறோம். எனவே எந்த தவறும் செய்யப்படவில்லை. மாற்று கட்சியை சேர்ந்தவர்களின் ஆட்சி காலத்திலும் இதே விதிமுறைகளை தான் கடைபிடித்து இருப்பார்கள்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மகாபாரதத்தில் அர்ஜூனனைபோல யூகத்தை உடைத்துவிட்டு வெற்றிக்கனியை பெறுவோம். அதற்கு ஏற்ப அ.தி.மு.க. கூட்டணி அமைந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்