நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.17.60 லட்சம் மோசடி - ஊழியர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி நகைக்கடை உரிமையாளரிடம் ரூ17.60 லட்சத்தை மோசடி செய்த ஊழியர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-02-25 22:33 GMT
பெங்களூரு,

பெங்களூருவை சேர்ந்தவர் ஜூடிஸ்ட்ரா மிஸ்ட்ரி (வயது 33). இவர் நகரபேட் பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரின் கடையில் ஊழியர்களாக சாய்சரண், மிதுன் ஆகியோர் வேலைப்பார்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும், உரிமையாளர் ஜூடிஸ்ட்ரா மிஸ்ட்ரியிடம், தங்களுக்கு தெரிந்த ஒருவர் டெல்லியில் சுங்க துறை அதிகாரியாக வேலைப்பார்த்து வருவதாகவும், அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து வைத்திருப்பதாகவும், தற்போது அதை அவர் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறினார். மேலும் அந்த தங்கத்தை நாங்கள் உங்களுக்கு வாங்கித்தருகிறோம் என்று கூறி ஜூடிஸ்ட்ரா மிஸ்ட்ரியிடம் ஆசை காட்டினர். அவர்கள் கூறியதை நம்பிய ஜூடிஸ்ட்ரா மிஸ்ட்ரி, அவர்கள் 2 பேரிடமும் ரூ.7.60 லட்சத்தை முன்பணமாக கொடுத்து டெல்லிக்கு அனுப்பினார். மேலும் தங்கத்தை வாங்கி வருமாறும் கூறினார். அதன்பேரில் அவர்கள் 2 பேரும் டெல்லிக்கு சென்றனர்.

பின்னர் 2 நாட்கள் கழித்து ஜூடிஸ்ட்ரா மிஸ்ட்ரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய சாய்சரண், தாங்கள் தங்கத்தை வாங்கிவிட்டு வரும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதாகக் கூறி போலீசார் பிடித்துவிட்டதாகவும், தங்களை விடுவிக்க போலீசார் ரூ.10 லட்சம் கேட்பதாகவும் கூறினார். மேலும் தான் சொல்லும் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தும்படியும் அவர் தெரிவித்தார்.அதன்பேரில் சாய்சரண் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சத்தை ஜூடிஸ்ட்ரா மிஸ்ட்ரி பணப்பரிமாற்றம் செய்தார். அதன்பிறகு சாய்சரண் மற்றும் மிதுனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் பெங்களூருவுக்கும் திரும்பி வரவில்லை. மேலும் அவர்களுடைய செல்போன்களும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தன.

அப்போதுதான் சாய்சரணும், மிதுனும் சேர்ந்து தனக்கு குறைந்த விலையில் தங்கம் வாங்கித்தருவதாகக் கூறி ரூ.17.60 லட்சத்தை மோசடி செய்துவிட்டது ஜூடிஸ்ட்ரா மிஸ்ட்ரிக்கு தெரியவந்தது. பின்னர் இதுபற்றி அவர் அல்சூர் கேட் போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் போலீசார் சாய்சரண் மற்றும் மிதுனை வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் அவர்கள் செல்போன்களின் எண்களை கைப்பற்றி, அவர்கள் யார், யாருடன் பேசி உள்ளனர் என்ற தகவல்களை பெற்று அதன்மூலமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்