“ஸ்டெர்லைட் பிரச்சினையில் கொள்கை முடிவு எடுக்க அரசு சிந்திக்கவில்லை” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் கொள்கை முடிவு எடுக்க அரசு சிந்திக்கவில்லை” என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-02-25 23:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மங்களகிரி விலக்கு அருகே நடந்தது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலோடு, 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இடைத்தேர்தல் வருகிறதா, வருமா, வராமல் போய்விடுமா என்ற கேள்விக்குறி உள்ளது. எது எப்படி இருந்தாலும், மக்களை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் அல்ல, பொதுத் தேர்தலே வரவேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொருவரும் 20 ஓட்டுக்களை சேகரித்தாலோ போதும். அந்த உறுதி ஏற்பதற்கான நிகழ்ச்சிதான் இது. தொடர்ந்து இன்று இருந்தே உங்கள் பிரசாரத்தை தொடங்க வேண்டும். கிராமங்கள் தோறும் மக்களை சந்திக்கும் வாய்ப்பு முகவர்களுக்கு தான் உள்ளது.

நாம் ஆட்சிக்கு வரப்போகிறோம். நமக்கு சந்தேகம் இருக்கிறதோ, இல்லையோ, தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது. நாம் சந்திக்காத தேர்தல் களம் கிடையாது. நாளைக்கு நான் தான் முதல்-அமைச்சர் என்று அரசியலுக்கு வருகின்றனர். ஊராட்சி சபை கூட்டத்தை நான் தான் நடத்தினேன் என்று வருகிறார்கள்.

நான், இங்கு மாவட்ட செயலாளராக பெரியசாமி இருந்தபோது, இந்த மாவட்டத்திலே கிராமம் கிராமமாக சென்று கட்சி கொடியேற்றி வைத்து உள்ளேன். நான் கிராமத்துக்கே போகாதவர் என்று என்னை பார்த்து பேசுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள எல்லா கிராமங்களிலும் உள்ள கொடிகளை கணக்கெடுத்து பார்த்தால், அதில் 99 சதவீதம் கொடிகள் கலைஞரால் ஏற்றப்பட்ட கொடி. அடுத்தது யார் என்றால் அவரது மகனான இந்த ஸ்டாலினுக்குத்தான் பெருமை.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு என்று உரிய மரியாதையை, உரிய மதிப்பை தர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது. 2011-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் இருந்த போது, இந்த பிரச்சினைக்கு விடிவுகாலம் ஏற்படுத்த வேண்டும். கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். உடனடியாக ஓய்வு பெற்ற நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டது. அதன்பிறகு ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதனை நிறைவேற்றுவதற்குள் ஆட்சி முடிந்து விட்டது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், அதனை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருக்க வேண்டும். ஆனால் அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை.

இதனால் கலைஞரால் நியமிக்கப்பட்ட கமிஷனின் அறிக்கையை, தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் கையில் எடுத்து முதல்வேலையாக நீங்கள் விரும்பக்கூடிய வகையில் தேவேந்திரகுல வேளாளர் என்ற நிலையில் பட்டியலில் சேர்க்கும் சூழலை உருவாக்கி தருவோம் என்று உறுதியாக கூறுகிறேன்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இது திட்டமிட்ட சதி. திட்டமிட்டு வேண்டும் என்றே குறிபார்த்து பயிற்சி பெற்று இருக்கக்கூடிய போலீசாரை வைத்து மத்திய அரசு துணையோடு, தமிழக அரசு இந்த காரியத்தை செய்து உள்ளது. தனியார் ஆலைக்கு துணை நிற்க வேண்டும் என்று அதனை செய்தனர்.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் ஆலை திறக்கக்கூடாது என்று உத்தரவு வந்து உள்ளது. ஆனால் எந்த நேரத்திலும் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கொள்கை முடிவு எடுத்து, எக்காரணம் கொண்டும் ஆலையை திறக்கக்கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், இதுவரை இந்த அரசு அதை பற்றி சிந்தித்து பார்க்கவில்லை. இதற்கு எல்லாம் முடிவு கட்ட தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஜெயதுரை, மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட பொருளாளர் ராமநாதன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், பூபதி, பிரம்மசக்தி, ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் டி.டி.சி.ராஜேந்திரன், துணை அமைப்பாளர்கள் தியாகராஜன், சுகுமார், வேங்கையன், அமுதன், அய்யம்பெருமாள், ரவி, சிவபெருமாள், நார்மல் சேகர், பேச்சிமுத்து, ராமசுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சண்முகையா, வர்த்தக அணி அமைப்பாளர் மகேந்திரன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் அம்பேத்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், துணை செயலாளர் ஆறுமுகபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், நவீன்குமார், ஜோசப், ரவி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்