கடையம் அருகே ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றம் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
கடையம் அருகே ஓடை ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையம்,
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் பஞ்சாயத்தில் மேட்டுத்தெரு, நடுத்தெரு ஆகிய தெருக்களில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அய்யன்பிள்ளை குளத்தின் மறுகால் ஓடையானது, ரவணசமுத்திரத்தின் இரு தெருக்களுக்கு பின்னால் ஓடி ராமநதி ஆற்றில் கலக்கிறது. இந்த ஓடை பல வருடங்களாக தூர்ந்து கிடக்கிறது. மேலும் ஓடைகளை ஆக்கிரமித்து வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. இதனால் தெரு மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. எனவே ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார். பிப்ரவரி 14-ந் தேதிக்குள் பொதுமக்களே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் அகற்றவில்லை.
இதையடுத்து அம்பை தாசில்தார் ராஜேஸ்வரி, அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன், கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகையா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.
இதனை அறிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்தனர். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஓடையின் முகப்பு எந்த நிலையில் உள்ளதோ அந்த அளவில் கடைசி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர். மேலும் 6 அடி நீளத்துக்கு ஆக்கிரமிப்புகளை பொதுமக்களே அகற்ற வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனையும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இந்தநிலையில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் அங்கு வந்தார். வீடுகளை இடித்து அகற்றவில்லையா? என அதிகாரிகளிடம் கேட்டார். மேலும் நீதிமன்றம் உத்தரவுப்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்ற வேண்டும் எனவும் கூறினார். இதனால் அங்கிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரனுக்கும், உதவி கலெக்டருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த அதிகாரிகள் சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.