கும்பகோணத்தில் விடுதி அறையில் பிணமாக கிடந்த ‘பிசியோதெரபிஸ்ட்’ போலீசார் விசாரணை

கும்பகோணத்தில் விடுதி அறையில் ‘பிசியோதெரபிஸ்ட்’ ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-02-25 22:15 GMT
கும்பகோணம்,

சென்னை அம்பத்தூர் சிப்காட் நகரை சேர்ந்தவர் திருவேங்கடம்(வயது 41). ‘பிசியோதெரபிஸ்ட்’. கடந்த 22-ந் தேதி கும்பகோணத்துக்கு வந்த திருவேங்கடம், கும்பகோணம் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த அவருடைய அறையில் இருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது திருவேங்கடம் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவேங்கடம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்