கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற தம்பதி

வாழ்வாதாரத்தை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-25 23:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. காலையில் இருந்தே திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஒரு தம்பதி கோரிக்கை மனுவுடன் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். அந்த பெண்ணின் கணவர் கையில் ஒரு பிளாஸ்டிக் கேன் இருந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு வந்ததும் அந்த நபர் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கேனில் இருந்த மண்எண்ணெயை மனைவியின் மீது ஊற்றினார்.

பின்னர் தனது உடலிலும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்தனர். உடனடியாக ஓடிச்சென்று இருவரையும் தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

எனது பெயர் பாலுச்சாமி (வயது 52). எனது மனைவி பேச்சியம்மாள் (50). இருவரும் கன்னிவாடி தாலுகா டி.பன்னப்பட்டியை அடுத்த டி.கோம்பையில் வசிக்கிறோம். கடந்த 2016-ம் ஆண்டு தனியாருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்தேன். அதில் மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை சாகுபடி செய்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி என்னிடம் ஒருவர் பேசினார். அப்போது, கோர்ட்டு மூலம் நிலத்தின் உரிமையாளரிடம் இருந்து குத்தகை உரிமத்தை அவர் பெற்றதாக கூறி நிலத்தில் நான் சாகுபடி செய்தவற்றை எடுத்துச்செல்லும்படி கூறினார்.

அதற்கு நான் மறுக்கவே, சாகுபடி செய்திருந்த மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை டிராக்டர் மூலம் நாசப்படுத்தினார். பின்னர் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) அப்பகுதியில் நாங்கள் வசித்த குடிசைக்கு தீ வைத்தும், பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தும் சிலர் அகற்றினர். எங்கள் கண்முன்பே வாழ்வாதாரம் பறிபோனது. பயிர்களை நாசப்படுத்திய போதும், குடிசையை இடித்த போதும் ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனாலேயே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றோம். எங்களின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் செலுத்திய குத்தகை பணம், அழிக்கப்பட்ட பயிருக்கான நிவாரணம் ஆகியவை கிடைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் தம்பதி கோரிக்கை மனு கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். முன்னதாக இருவரையும் முதலுதவி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்