பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து தர்ணா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள், தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-25 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எங்கள் பகுதியில் உள்ள பொட்டியம்மன் குளத்தின் வடிகால் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டும் உத்தரவிட்டது.

அதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார். தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதியில் நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது வரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் இதுதொடர்பாக மனு அளிக்கும்படியும் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். அதேபோல் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது, தங்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து தொழிலாளர்கள் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு சம்பளம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இவர்களை தொடர்ந்து வேடசந்தூர் தாலுகா செல்லக்குட்டியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் செய்தனர். அப்போது, எங்கள் பகுதியில் செயல்படும் அரசு பள்ளிக்கு இடம் தேவைப்படுகிறது என்று கூறி எங்கள் நிலங்களை கையகப்படுத்த உள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறினர். அதற்கு பதிலாக மாற்று இடம் வழங்குவதாகவும் தெரிவித்தனர். அதற்கு நாங்களும் சம்மதம் தெரிவித்தோம்.

ஆனால் கடந்த ஓராண்டாக எங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு அவர்கள் ஏற்கனவே வைத்திருந்த நிலத்தின் அளவைவிட குறைவாக இடம் வழங்குவதாக தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களையும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து நடந்த தர்ணா போராட்டங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்