நாகர்கோவில் மாநகராட்சியில் மீனவ கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா? குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரி பதில்

நாகர்கோவில் மாநகராட்சியில் மீனவ கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆணையாளர் சரவணகுமார் பதில் அளித்துள்ளார்.

Update: 2019-02-25 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், மீன்வளத்துறை துணை இயக்குனர் லாமெக் ஜெயக்குமார், உதவி இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நடந்த விவாதம் வருமாறு:-

நெய்தல் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் பெர்லின், குமரி மாவட்ட மீன்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் அந்தோணி:- நாகர்கோவில் நகராட்சியை தமிழக அரசு மாநகராட்சியாக அறிவித்துள்ளது. இதில் கடலோர மீனவ கிராமங்களான கோவளம், மணக்குடி, பள்ளம்துறை, கேசவன்புத்தன்துறை, ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு இணைக்கப்படும் பட்சத்தில் வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதித்துவம் பறிபோகும் நிலை உள்ளது. இணைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா? என்பதை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

கடலோர கிராமங்களை நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்று 2017-ம் ஆண்டில் இருந்து கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறோம். ஏற்கனவே இங்கு கலெக்டராக இருந்த சஜ்ஜன்சிங் சவான் கடலோர கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை மீறி கடற்கரையை இணைக்க மீண்டும் முயற்சி செய்வதாக அறிகிறோம். நாகர்கோவில் மாநகராட்சியோடு கடற்கரை கிராமங்கள் இணைக்கப்படுவதை தடுக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்ற விவரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நகராட்சி ஆணையர் சரவணகுமார்:- நாகர்கோவில் நகராட்சியில் 52 வார்டுகள் உள்ளடங்கிய பகுதிகள்தான் தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வேறு எந்த பகுதிகளும் தற்போது இணைக்கப்படவில்லை. எனவே வதந்திகளை யாரும் நம்பாதீர்கள். யாரும் அச்சப்படவும் தேவையில்லை.

மீனவர்கள்:- கடலோர கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பகுதியில் இரயுமன் துறையில் இருந்து துறைமுகத்துக்கு வரும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. உடனடியாக சீரமைக்க வேண்டும். மீனவர் நலவாரியம் செயல்படாமல் இருக்கிறது. அதனை செயல்படுத்த வேண்டும். மீனவர் நலவாரியம் மூலம் தற்போது வழங்கப்படும் ரூ.400 ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை மூலமாக உள்நாட்டு மீனவர்களுக்கு மீன்பாசி குத்தகை வழங்க வேண்டும்.

தடம் மாறி இயக்கப்படும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குளச்சலில் இருந்து குறும்பனை, கருங்கல், மார்த்தாண்டம் வழியாக குலசேகரத்துக்கு ஒரு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோர கிராமங்களை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார்.

மேலும் செய்திகள்