விழுப்புரம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு - மாமனார் கைது

விழுப்புரம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய மாமனார் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-25 22:45 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் தாலுகா கோனூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பாவாடை மகன் தேவன் (வயது 32). இவர் கோனூர் காமன் கோவில் தெருவை சேர்ந்த வைத்தியலிங்கம் மகள் செல்வியை (30) காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு பிறகு தேவனுக்கும், வைத்தியலிங்கம் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தேவனின் மகன் விஷ்வா கடந்த ஓராண்டுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டான். இதனால் தேவனுக்கும், அவரது மனைவி செல்விக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் செல்வி, தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவன், வைத்தியலிங்கம் வீட்டின் முன்பு நின்றுகொண்டு என்னுடைய மனைவியை தன்னுடன் சேர்த்து வையுங்கள் என்று கூறி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வைத்தியலிங்கம் (69), அவரது மகன் கலியபெருமாள் (35) ஆகியோர் சேர்ந்து தேவனை இரும்புக்கம்பியால் தாக்கியதோடு அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில் தலை, இடது கன்னத்தில் காயமடைந்த தேவன், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தேவன் கொடுத்த புகாரின்பேரில் வைத்தியலிங்கம், கலியபெருமாள் ஆகியோர் மீது காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்தியலிங்கத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்