ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்: டோக்கன் முடிந்ததாக கூறியதால் பொதுமக்கள் சாலை மறியல்

ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கான டோக்கன் முடிந்ததாக கூறியதால் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

Update: 2019-02-25 22:15 GMT
வீரபாண்டி,

வீரபாண்டி மண்டல அலுவலகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகள் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன் முடிந்ததாக கூறியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் வீரபாண்டி மண்டல அலுவலகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகள் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படுவதாக தகவல்கள் பரவியது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள பெண்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காலை முதலே வரிசையில் நின்று கொண்டிருந்தனர். காலை 10 மணி அளவில் மண்டல அலுவலகத்தில் டோக்கன் கொடுப்பது தொடங் கியது. மதியம் 2 மணி அளவில் திடீரென்று டோக்கன் முடிவடைந்ததாக மண்டல அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் காலை முதல் காத்திருந்த பெண்கள் டோக்கன் கிடைக்காததால் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வீரபாண்டி போலீசார் அவர்களை சமாதானம் செய்து மீண்டும் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்தனர். வீரபாண்டி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூட்டம் அதிகம் காணப்பட்டதால் மண்டல அலுவலகம் முன்பாக சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மிகவும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்திருந்த பெண்கள் வெயில் தாக்கம் தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் சிரமப்பட்டனர். கூட்டத்தினை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள சிலர் விண்ணப்ப படிவத்தினை 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்து லாபம் பார்த்தனர். வேறு சிலர் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்ய 20 ரூபாய் பெற்றுக் கொண்டனர். இதனால் வீரபாண்டி பகுதியில் உள்ள மண்டல அலுவலகம் காலை முதல் மாலை வரை பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்