பனை ஓலையில் அழைப்பிதழ், வீட்டு உபயோக பொருட்கள்: அசத்தும் பட்டதாரி வாலிபர்
எழுமலை அருகே பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை ஓலையில் அழைப்பிதழ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து பட்டதாரி வாலிபர் அசத்தி வருகிறார்.
உசிலம்பட்டி,
மாநில மரமான பனை மரத்தில் இருந்து நுங்கு, பதனீர், கருப்பட்டி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர பனை ஓலை மூலம் மனிதனின் பயன்பாட்டிற்காக பல பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழை இலை, துணிப்பை, பனை ஓலை உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அந்த வகையில் மதுரை மாவட்டம் எழுமலை அருகே பட்டதாரி வாலிபர் ஒருவர் பனை ஓலை மூலம் அழைப்பிதழ், வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து அசத்தி வருகிறார்.
எழுமலை அருகே உள்ள டி.ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 30). இவர் எம்.சி.ஏ. படித்து விட்டு வங்கி பணியில் இருந்தவர். வங்கி பணியை விட்டுவிட்டு சாமிநாதன் தற்போது பனை ஓலையை வைத்து பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். பனை ஓலையை வைத்து கூடைகள், மலிகை சாமான்கள் வைக்கக்கூடிய பெட்டிகள், பொருட்களை கடைகளில் வாங்கி வருவதற்கு என்று தனியாக கூடைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் திருமணத்திற்கான மாலை, பூங்கொத்துகள், தோரணங்கள் உள்பட பல்வேறு பொருட்களையும் பனை ஓலை மூலம் தயாரித்து வருகிறார். இத்துடன் திருமணம் மற்றும் வீட்டில் நடக்கும் பல்வேறு விஷேச நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களையும் அச்சடித்து வருகிறார். சிறிய அளவிலான அழைப்பிதழ்களையும் (விசிட்டிங் கார்டு) தயாரித்து கொடுக்கிறார்.
இதுகுறித்து சாமிநாதன் கூறுகையில், பனை ஓலையில் இருந்து பொருட்கள் தயாரிப்பதில் சிறுவயதில் இருந்தே ஆர்வம் இருந்தது. இதனால் படித்துவிட்டு வேலைபார்ப்பதை விட சுயமாக தொழில் செய்வதில் மன நிறைவாக உள்ளது. காரணம் இந்த தொழில் செய்வதானால் சிலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடிகிறது. மேலும் பனை ஓலை மூலம் தயாரிக்கும் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கினால் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது வெகுவாக குறையும். குளிர்சாதன பெட்டியில் காய்கறிகளை வைக்காமல் பனை ஓலையில் தயாரிக்கப்படும் கூடைகளில் வைப்பதன் மூலம் 2, 3 தினங்களுக்கு காய்கறிகள் கெட்டுப்போகமால் இருக்கும். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முடிந்தவுடன் அதை தூக்கி எரிந்து விடுவோம். இதனால் தேங்கும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆனால் பனை ஓலையில் தயாரிக்கப்படும் பொருட்கள் சுலபமாக மக்கி விடும். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்றார்.