பாம்பன் ரோடு பாலத்தில் புதிதாக மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்

பாம்பன் ரோடு பாலத்தில் புதிதாக மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2019-02-25 22:30 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் பாம்பன் ரோடு பாலத்தில் இரவு முழுவதும் பெரும்பாலான மின்விளக்குகள் எரியாததால் ரோடு பாலம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படும். இரவு நேரத்தில் ரோடு பாலத்தை பார்த்து ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மின்விளக்குகள் அமைக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் புதிதாக மின் கம்பங்கள் அமைக்க பணிகள் நேற்று முதல் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக ரோடு பாலத்தின் ஒரு பகுதியில் புதிய மின் கம்பங்கள் அமைக்க நடைபாதையில் எந்திரம் மூலம் கற்கள் உடைக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பாம்பன் ரோடு பாலத்தில் மின்விளக்குகள் இல்லாமலும் சேதமான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுஉள்ளது. ரோடு பாலத்தில் ரூ.60 லட்சம் நிதியில் ஒரு பகுதியில் முதல்கட்டமாக உப்புக்காற்றால் துருப்பிடிக்காத வகையில் 67 மின்கம்பங்கள் புதிதாக வைக்கப்பட்டு ஒவ்வொரு மின்கம்பத்திலும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

ஒவ்வொரு மின்கம்பம் சுமார் 7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ரோடு பாலத்தில் இந்த புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியை ஒரு மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுஉள்ளோம்.

2–வது கட்டமாக ரோடு பாலத்தின் மற்றொரு பகுதியிலும் சேதமான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள், மின் விளக்குகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்