திருவாடானை அருகே கடந்த 10 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கலெக்டரிடம் பெண் புகார்
திருவாடானை அருகே கடந்த 10 ஆண்டுகளாக தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட கலெக்டரிடம் பெண் புகார் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். பரமக்குடி தாலுகா வெங்கிட்டன்குறிச்சி அருகே மருந்தூர் என்ற கணக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராம தலைவர் செல்வராஜ் தலைமையில்பள்ளி குழந்தைகளுடன் திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அந்த மனுவில், கணக்கனேந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை பள்ளிக்கு வராமல் அதிக நாட்கள் விடுமுறையில் செல்கிறார். ஆனால் பணிக்கு வந்ததுபோல வருகை பதிவேட்டில் திருத்தம் செய்து விடுகிறார். கழிப்பறையை சுத்தம் செய்ய மாணவ–மாணவிகளை பயன்படுத்துகிறார். வகுப்பறையில் பாடம் நடத்தாமல் வெளியே வந்து பெரும்பாலான நேரம் செல்போனில் தான் பேசுகிறார். இவரது நடவடிக்கைகள் குறித்து 3 ஆண்டுக்கு முன்பே கலெக்டர், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளோம். எனவே உடனடியாக அவரை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
திருவாடானை தாலுகா பெரியார் நகரை சேர்ந்த செல்லத்துரை மனைவி ரோஸ்மேரி என்பவர் கொடுத்துள்ள மனுவில், எனக்கும் எனது உடன் பிறந்த சகோதரருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த எனது சகோதரர் எனது கணவரை இரண்டு முறை அரிவாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சொத்து தொடர்பாக கோர்ட்டில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் எங்களை கடந்த 10 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் பொதுப்பாதையில் நடந்து செல்லக்கூடாது. பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது, ஊருணியில் தண்ணீர் எடுக்க வரக்கூடாது என்று மிரட்டுகின்றனர். எங்கள் வீட்டின் முன்பு உள்ள பாதையையும் அடைத்து விட்டனர். எனவே நாங்கள் உயிருக்கு பயந்து பெரியார் நகரில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் சென்று வசித்து வருகின்றோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த முனியம்மாள் (வயது67) என்பவர் அளித்த மனுவில், எனது மகன் நம்புமுருகன்(27) என்பவர் மீன்பிடி தொழில் செய்வதற்காக துபாய் நாட்டிற்கு சென்றார். அங்குகப்பலில் இருந்து தவறி விழுந்து கடலில் மூழ்கி பலியாகி விட்டார். அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு எங்களுக்கு வசதி இல்லாததால் அங்கேயே இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அவர் வெளிநாடு செல்வதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்து வருகின்றனர். எங்கள் குடும்பம் வறுமை நிலையில் உள்ளதால் தமிழக முதல்–அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து துபாயில் மீனவர் பலியானதற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ரகுமான் அளித்துள்ள மனுவில், கடந்த 2018–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக விவசாயம் பொய்த்து போனதாலும், கடும் வறட்சியாலும் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். காப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ளதால் அவர்களது வாழ்வாதாரமும், எதிர்காலமும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. எனவே உடனடியாக பயிர் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். கடலாடி யூனியன் டி.வேப்பங்குளம் ஊராட்சி கட்டாளங்குளம் கிராம பொதுமக்கள் சார்பில் ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எங்களது கிராமத்திற்கு கடந்த 6 மாதமாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.
சுமார் 1000 குடும்பங்கள் இருக்கும் இந்த பகுதியில் லாரியில் கொண்டு வரப்படும் தண்ணீரை ஒரு குடம் ரூ.5 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். மேலும் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்கிறது. எங்களது கிராமத்திற்கு காவிரி குடிநீர் வருவதில்லை. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கலைமணி அளித்துள்ள மனுவில், நகரமயமாக்கலால் கிராமப்புறங்களில் விவசாய தொழிலாளர்களுக்கு வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கூலியை ரூ.500 ஆக உயர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.