கொளப்பலூர் அருகே 81 ஏக்கர் பரப்பளவில் ரூ.106½ கோடியில் கோபி ஆயத்தஆடை பூங்கா அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்
கொளப்பலூர் அருகே 81 ஏக்கர் பரப்பளவில் ரூ.106½ கோடியில், கோபி ஆயத்தஆடை பூங்காவை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
கோபி,
ஈரோடு மாவட்டம் ஜவுளித்துறைக்கு பெயர் பெற்று விளங்குகிறது. ஈரோடு ஜவுளி சந்தை, சென்னிமலை போர்வை, பவானி ஜமுக்காளம் என்று ஒவ்வொரு பகுதியும் ஜவுளித்துறையில் சிறந்து விளங்குகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, டெக்ஸ்வேலி ஜவுளி சந்தைகள் என அனைத்து வகையான ஆடைகளும் விற்பனை செய்யும் மிகப்பெரிய சந்தைகளாக உள்ளன. ஆனால் ஆயத்த ஆடை உற்பத்தி என்றால் அது திருப்பூர் என்ற நிலைதான் இருந்தது.
தற்போது ஆயத்த ஆடை உற்பத்தியிலும் ஈரோடு மாவட்டம் சிறந்து விளங்கும் வகையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் பகுதியில் கோபி ஆயத்த ஆடை பூங்கா என்ற பெயரில் புதிய ஆடை உற்பத்தி வளாகம் தொடங்கப்பட்டு உள்ளது.
கொளப்பலூர்– குருமந்தூர் ரோட்டில் தாழ்குனி செல்லும் வழியில் கோபி ஆயத்த ஆடை பூங்கா தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக 81 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. கோபி ஆயத்த ஆடை பூங்கா என்ற பெயரில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளி மையம் தொடங்கப்பட்டு அதில் 10 பேரை இயக்குனராக கொண்டு இந்த நிர்வாகம் செயல்படுகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் ரூ.40 கோடியும், தமிழக அரசு ரூ.9 கோடியும், தமிழக அரசின் உலக முதலீட்டாளர்கள் திட்டம் சார்பில் ரூ.5 கோடி நிதியும் பெறப்பட்டு உள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் பங்களிப்பாக ரூ.52 கோடியே 58 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் கோபி ஆயத்த ஆடை பூங்கா ரூ.106 கோடியே 58 லட்சம் செலவில் தொடங்கப்பட்டு உள்ளது. ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தொழில்கூடங்களை இந்த பகுதியில் நிறுவி, இந்த பகுதி பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கோபி ஆயத்த ஆடை பூங்கா அடிக்கல்நாட்டு விழா மற்றும் பூங்காவின் முதல் தொழில் நிறுவன திறப்பு விழா ஆகியவை நேற்று நடந்தது.
விழாவுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், திருப்பூர் எம்.பி. சத்தியபாமா, எம்.எல்.ஏ.க்கள் இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு கோபி ஆயத்த ஆடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி, புதிய தொழில்கூட செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
இதற்கான கல்வெட்டினை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணனும் திறந்து வைத்தனர்.
விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–
தொழில்துறையில் தமிழகத்தின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக கொளப்பலூர் அருகே 81 ஏக்கர் பரப்பளவில் 7 தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்திக்கூடத்தை நிறுவ உள்ளன. இந்த ஆயத்த ஆடை பூங்கா இங்கு வந்திருப்பதால் இந்த ரோடு 2 வழிச்சாலையாக மாறும். கோபி–செங்கப்பள்ளி சாலை 4 வழிச்சாலையாக 6 மாதங்களில் மாற்றப்படும். இங்கு தங்கி வேலை செய்ய உள்ள பணியாளர்களுக்காக 2 ஆயிரத்து 500 வீடுகள், 3 ஆயிரம் பேர் தங்க வசதியுடன் கூடிய விடுதி ஆகியவை அமைக்கப்படும். இந்த விடுதி, வீடுகள், தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையின்றி திருப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தொழிற்சாலை ஒதுக்கீட்டின் அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.
என்ஜினீயரிங் முடித்து விட்டு 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் வருகிற கல்வி ஆண்டு முதல் பிளஸ்–2 முடித்தாலே வேலை வாய்ப்பு பெறும் வகையில் பாடத்திட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. திறன் மேம்பாட்டுக்காக புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
இந்த கோபி ஆயத்த ஆடை பூங்காவில் ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுவரை தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஜவுளி பூங்காக்கள் அனைத்தும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக உருவாக்கப்பட்டது. முதன் முதலாக தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக கோபி ஆயத்த ஆடை பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியதாவது:–
வறட்சியால் பயனின்றி கிடந்த இந்த பகுதியில் கோபி ஆயத்த ஆடை பூங்கா தொடங்கப்பட்டு இருப்பதால் 7 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 7 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது ரூ.106½ கோடியில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்த பணி விரைவில் ரூ.1000 கோடி முதலீடாக விரிவாக்கம் பெற்று சிறப்படைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பேசும்போது, ‘தற்போது வறட்சி மிகுந்த இந்த பகுதியில் கொண்டு வரப்பட்டு உள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவான இந்த கோபி ஆயத்த ஆடை பூங்கா சிறந்த தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும். இங்கு மேலும் 7 கட்டிடங்கள் கட்டப்பட்டு தொழிற்சாலைகள் தொடங்கப்படும். சர்வதேச அளவிலான திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் உருவாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை தரப்பரிசோதனை செய்ய சர்வதேச தர பரிசோதனை மையம் தொடங்கப்படும்.’ என்றார்.
விழாவில் கோவை மண்டல ஜவுளித்துறை ஆணையாளர் அலுவலக இணை இயக்குனர் ஆ.பாலசுப்பிரமணியம், கோபி ஆர்.டி.ஓ. அசோகன், ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், கோபி ஆயத்த ஆடை பூங்கா தலைவர் ஜான்மில்டன், நிர்வாக இயக்குனர் ரா.மகேஷ், மேலாண்மை ஆலோசகர் சிவஞான செல்வம், தொழில்நுட்ப ஆலோசகர் ரா.ஜெயமோகன், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ரமாமணி, டெக்ஸ்வேலி துணைத்தலைவர் யு.ஆர்.சி.தேவராஜன், இயக்குனர் டி.பி.குமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.