மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூர், அரியலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2019-02-25 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 272 மனுக்களை வாங்கினார். பின்னர் அதிகாரிகளிடம் அதனை அளித்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், அந்த மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் சிறந்த 3 பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசு தொகையை வழங்கினார். மேலும் ஆலத்தூர் தாலுகா அழகிரிபாளையம் கிராமத்தை சேர்ந்த குமார்(வயது 23) என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதால், தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை, குமாரின் பெற்றோரிடம் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 22 மனுக்களின் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் சாந்தா அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து கலெக்டர் சாந்தா முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அதிநவீன செயற்கை கால்கள் 5 பேருக்கு ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ளோர் திருமண உதவித்தொகை திட்டத்தில் 2 பேருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான உதவித்தொகையும், விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு ரூ.62 ஆயிரத்து 700 மதிப்பீட்டிலும் மேலும், 4 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடை பயிற்சி உபகரணங்கள் ரூ.5 ஆயிரத்து 920 மதிப்பீட்டிலும் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 87 ஆயிரத்து 620 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, தனித்துணை கலெக்டர் மனோகரன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளர் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித்திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 476 கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் 2018-19-ம் ஆண்டு சிறந்த பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 3 விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25,000, 2-ம் பரிசாக ரூ.20,000, 3-ம் பரிசாக ரூ.15,000-க்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாலாஜி, பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்