மது குடிக்கும்போது தகராறு பெயிண்டர் கல்லால் அடித்துக்கொலை

மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை கல்லால் அடித்துக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-02-25 22:45 GMT
போத்தனூர்,

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிஜு (வயது 22), பெயிண்டர். இவருடன் கோவை ஈச்சனாரி அருகே உள்ள அறிஞர் அண்ணா நகரை சேர்ந்த முஜிபுர் ரகுமான் (22), சுகுணாபுரத்தை சேர்ந்த ரீகன் (19) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இதனால் அவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆனார்கள்.

அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு மதுக்கரை மார்க்கெட் ரோடு 3 கண் பாலம் அருகே அமர்ந்து மது குடித்தனர். அது தீர்ந்து போனதால் மீண்டும் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக முஜிபுர் ரகுமான், தனது நண்பர்களான ரீகன், பிஜு ஆகியோரிடம் பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

அப்போது, பிஜுவின் சட்டை பையில் பணம் இருந்ததை முஜிபுர் ரகுமான் பார்த்தார். உடனே அவர் பணத்தை எடுக்க முயன்றார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முஜிபுர் ரகுமான் கீழே கிடந்த கல்லை எடுத்து பிஜுவின் தலையில் சரமாரியாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முஜிபுர் ரகுமான் அங்கிருந்து தப்பிச்சென்றார். மயங்கி கிடந்த பிஜுவை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரீகன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முஜிபுர் ரகுமானை கைது செய்தனர். மேலும் இந்த கொலையை நேரில் பார்த்த ரீகனிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்