திருவள்ளூரில் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.26 லட்சம் மோசடி மின்வாரிய அதிகாரி கைது

திருவள்ளூரில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக மின்வாரிய அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-25 22:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி காலத்தி தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62). இவர் தனது மகனுக்கும், உறவினரின் மகனுக்கும் அரசு வேலை வாங்கி தருமாறு கடந்த 2014–ம் ஆண்டு பொன்னேரியில் தாசில்தாராக இருந்த சின்னகருப்பன் என்பவரை அணுகினர். தற்போது இவர் ஓய்வுபெற்று விட்டார்.

எண்ணூர் மின்வாரிய அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றும் தனது தம்பி அரவணைசெல்வம் (50) என்பவர் மூலமாக மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக சின்னகருப்பன் ரூ.21 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதேபோல் சண்முகத்தின் மற்றொரு உறவினர் தனலட்சுமி என்பவரும் தனது மகளுக்கு ஆசிரியர் பணி வாங்கி தருமாறு சின்னகருப்பன் மற்றும் அரவணைசெல்வத்திடம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் யாருக்குமே வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவிட்டார்.

இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ருக்மாங்கதன், சப்–இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கணேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சென்னையில் பதுங்கி இருந்த அரவணைசெல்வத்தை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் தலைமறைவாக உள்ள அவருடைய சகோதரரும், ஓய்வுபெற்ற தாசில்தாருமான சின்னகருப்பன் (61) என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்