சாந்தூரில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது - கலெக்டரிடம் கோரிக்கை
சாந்தூரில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுவாக அளித்தனர். அதன்படி ஊட்டி அருகே சாந்தூரை சேர்ந்த பொது மக்கள் அளித்த மனுவில், சாந்தூரில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மேலும் பொதுமக்கள் மற்றும் விலங்குகளுக்கு நோய்கள் வர வாய்ப்பு உருவாகும். எனவே எங்கள் ஊரில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.
ஊட்டியை சேர்ந்த தங்கவேல் என்பவர் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின்போது எல்க்ஹில் முருகன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் கரகம் எடுத்து வந்து வழிபாடு நடத்துவார்கள். இதற்கு கோவில் உள்ள பகுதியில் சிமெண்டு பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மூலம் பந்தல் அமைத்து வந்தோம். ஆனால் தற்போது அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவையொட்டி சிமெண்டு பைகளை பயன்படுத்தி பந்தல் அமைக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் அதற்கு போலீஸ் அதிகாரிகள் எந்தவித கெடுபிடியும் செய்யாமல் இருக்கவும், கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவர் மயில்சாமி அளித்துள்ள மனுவில், ஊட்டியில் இருந்து மதுரை, திருச்சி, துறையூர் போன்ற வெளியிடங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் ஊட்டியில் இருந்து மேற்கண்ட இடங்களுக்கு செல்லும் பயணிகள் கோவை, திருப்பூர் நகரங்களுக்கு சென்று, அங்கிருந்து வேறு பஸ்சில் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடுமையாக பாதிக் கப்படுகின்றனர்.
எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.