வெலிங்டன் கன்டோன்மெண்ட் பள்ளியில் தமிழ் வழி கல்வி தொடர வலியுறுத்தி உண்ணாவிரதம்
வெலிங்டன் கன்டோன்மெண்ட் பள்ளியில் தமிழ் வழி கல்வி தொடர வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
குன்னூர்,
குன்னூர் அருகே கன்டோன்மெண்ட் போர்டு நிர்வாகத்தின் கீழ் சின்னவண்டி சோலை மற்றும் வெலிங்டனில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சின்னவண்டி சோலை பள்ளியில் ஆங்கில வழி கல்வியும், வெலிங்டன் பள்ளியில் தமிழ் வழி கல்வியும் கற்பிக்கப்படுகிறது. இந்த 2 பள்ளிகளிலும் கன்டோன்மெண்ட் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள பர்லியாறு, ஒசட்டி, பேரட்டி, காமராஜபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
மேற்கண்ட 2 பள்ளிகளையும் இணைத்து 2019-2020-ம் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் ஒரே பள்ளியாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக அந்த 2 பள்ளிகளில் கன்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் உள்ள 7 வார்டுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தவிர பிற பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று சிலர் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து வெலிங்டன் கன்டோன்மெண்ட் பள்ளியில் தமிழ் வழி கல்வி தொடர வேண்டும், கன்டோன்மெண்ட் நிர்வாகத்துக்கு உட்படாத பிற பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று வலியுறுத்தி தலைமை நிர்வாக அதிகாரியிடம் பெற்றோர் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் வெலிங்டன் கன்டோன்மெண்ட் பள்ளியில் தமிழ் வழி கல்வி தொடர கோரி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு கன்டோன்மெண்ட் துணைத்தலைவர் பாரதியார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் சீனிவாசன், மேரி ஷீபா, முன்னாள் துணைத்தலைவர் வினோத்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டம் குறித்து கன்டோன்மெண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஸ் வர்மா கூறியதாவது:-
உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக கூறி நிர்வாகத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் என்ன காரணத்துக்காக உண்ணாவிரத போராட்டம் என்பதை சரியாக குறிப்பிடவில்லை. தமிழ் வழி கல்வியை நிறுத்த முடிவு செய்யவில்லை. மேலும் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவ- மாணவிகளை வெளியே அனுப்பவும் முடிவு மேற்கொள்ளப்படவில்லை. கன்டோன்மெண்ட் எல்லைக்கு வெளியே இருந்து வரும் மாணவ-மாணவிகளுக்கு மட்டும் கட்டணம் உயர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு கன்டோன்மெண்ட் எல்லைக்குள் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு பொருந்தாது. நிர்வாகம் தமிழ் வழி கல்வியை நிறுத்த முடிவு எடுக்காதபோது, ஏன் இந்த போராட்டம் என்று தெரியவில்லை. இது தேவையற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.