கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனு
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கொழுக்குமலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் சங்கத்தின் ஆண்டிப்பட்டி தாலுகா ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி தலைமையில் தூய்மை தொழிலாளர்கள் சிலர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, அகவிலைப்படி நிலுவைத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. பல முறை ஊராட்சி செயலாளர்களிடம் பணியாளர்கள் கேட்டும் எந்த பயனும் இல்லை. மற்ற மாவட்டங்களில் சம்பளம் ரூ.6 ஆயிரத்து 200 வழங்கி வருகின்றனர். எனவே துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
போடி அருகே கொழுக்குமலை தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘கொழுக்குமலையில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் தேயிலை தோட்டத்தில் வேலைபார்த்து வருகிறோம். எங்களுக்கு சொந்த வீடோ, வீட்டுமனையோ இல்லை. எனவே, எங்கள் 40 குடும்பங்களுக்கும் அரசு மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், அந்த மக்கள் கூறுகையில், ‘நாங்கள் பல தலைமுறைகளாக தோட்டத்தில் வேலை செய்து வருகிறோம். தோட்ட வேலையில் பணி ஓய்வு பெற்ற பின்பு அங்கு தங்குவதற்கு வீடு கிடையாது. பணியாற்றும் வரை தான் வீடு வழங்கப்படும். இதனால் பணி ஓய்வுக்கு பிறகு வசிக்க வீடு இன்றி, வாடகை வீடு தேடி அலையும் நிலைமை உள்ளது. கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியிலேயே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்’ என்றனர்.
தேனி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆற்றங்கரை புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். தற்போது 20 பேருக்கு மட்டுமே பட்டா வழங்க உள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்த பட்டியலில் உள்ள சிலருக்கு ஏற்கனவே வீட்டுமனை பட்டா உள்ளது. எனவே, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறினர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘தெப்பம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள பயனாளிகளை புறக்கணித்து விட்டு, தகுதியில்லாத நபர்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, தகுதியுள்ள பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
தேனி மீறுசமுத்திரம் கண்மாய் பாசன பகுதியை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், ‘மீறுசமுத்திரம் கண்மாய் பாசன பகுதியில் 30 பேருக்கு விவசாய நிலம் உள்ளது. எங்கள் நிலத்துக்கு சென்று வரவும், விளை பொருட்களை எடுத்து வரவும் சாலை வசதி இல்லை. எனவே சாலை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.