ஆம்பூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் சாவு பெண் உள்பட 4 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-02-25 22:30 GMT
ஆம்பூர், 

நாட்டறம்பள்ளி அருகே மேல்தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராஜசேகர் (வயது 23). இவர் வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடக்கும் பகுதியில் இறைச்சி விற்பனை செய்து வருவது வழக்கம்.

பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் எருதுவிடும் திருவிழாவில் கடை போடுவதற்காக 50 கிலோ இறைச்சியுடன் ராஜசேகர் மற்றும் வீரபல்லியை சேர்ந்த சிவக்குமார் (48), சிவக்குமாரின் மனைவி சசிகலா (38) மற்றும் அருள் (39) ஆகியோர் ஒரு காரில் நேற்று சென்றனர். காரை பிரசாத் (40) என்பவர் ஓட்டினார்.

கார் மாதனூர் அருகே ஜமீன் என்ற இடத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்