விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழாவில் கவர்னரின் காரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழாவில் கவர்னரின் காரை ஊழியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-25 00:10 GMT

புதுச்சேரி,

நாடு முழுவதும் உள்ள சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதயுதவி வழங்கும் திட்டத்தை உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். இதேபோல் புதுவை பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்த திட்ட தொடக்கவிழா நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி திட்டத்தை தொடங்கிவைப்பது காணொலி காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது. புதுவையை பொறுத்தவரை 4 ஆயிரத்து 626 பேர் இந்த நிதியுதவி பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்து 400 பெயர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் 1,712 பேரின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

விழாவில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:–

புதுவையில் நான் கவர்னராக பதவியேற்ற பின் நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தேன். தொழில் அதிபர்கள் உதவியுடன் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன. இதனால் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்தது.

கடந்த 20 ஆண்டுகளாக ஏரி, வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருந்தன. தற்போது அந்த பணிகள் நடந்திருப்பதால் அனைத்து ஏரிகளிலும் நீர் தேங்கியுள்ளது.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.

விழாவில் வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மதகடிப்பட்டு உழவர் உதவியகத்தில் வோளண் இணை இயக்குனர் சிவராமன் தலைமையிலும் விழா நடந்தது.

இதற்கிடையே காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்களுக்கு 54 மாதங்கள் சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதால் கவர்னரை சந்தித்து முறையிட ஏ.ஐ.டி.யு.சி. சங்க தலைவர் சேதுசெல்வம் தலைமையில் காத்திருந்தனர். இதுகுறித்து கோரிக்கை அட்டைகளையும் வைத்திருந்தனர். அதை போலீசார் அகற்றினார்கள். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

விழா முடிந்து கவர்னர் செல்லும்போது அவரை முற்றுகையிட திட்டமிட்டு அவர்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்களை தடுத்த போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்