மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
மாவட்டத்தில் 186 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
சிவகங்கை,
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும், செந்தில்நாதன் எம்.பி. முன்னிலையிலும் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணக்குமார் வரவேற்றார்.
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கரன் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:– மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கவும், அவர்கள் வாழ்வில் அனைத்து வகையிலும் முன்னேற்றம் காணவும், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தனித்துறை ஒன்றை 1993–ம் ஆண்டு அமைத்து அனைத்து மாவட்டங்களிலும் அலுவலகம் நியமனம் செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படும் மாநிலங்கள் குறித்து 2017–18–ம் ஆண்டில் நாடாளுமன்றக் குழு வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் உட்பட 6 மாநிலங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது. நமது மாநிலம் 2013–14–ம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டமைக்காக சிறந்த மாநிலம் என்னும் தேசிய விருதினைப் பெற்றது. மாற்றுத்திறனாளிகளை மற்றவர்களுடன் ஒருங்கிணைத்து உருவாக்குவதே தமிழ்நாடு அரசின் நோக்கமாகும்.
மேலும், நமது மாநிலம் 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 11.79 லட்சம் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை மாநில மக்கள் தொகையில் 1.63 சதவீதமாகும். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்த வரை 30 ஆயிரம் நபர்கள் மாற்றுத்திறனாளியாக கண்டறியப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மொத்தம் 186 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சத்து 17ஆயிரத்து 318 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உதவி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கபடிக்குழு தலைவர் பாலா, கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் பாண்டி, சசிக்குமார், ஜெயப்பிரகாஷ், ராஜா, மோகன், சசிக்குமார், பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.