திருவிழாவின்போது தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி திருப்பூரில் காத்திருப்பு போராட்டம் கோவில் வளாகத்தில் நாளை நடக்கிறது
திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாளை கோவில் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என ஊர் பொதுமக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் காந்திநகரை அடுத்த பத்மாவதிபுரத்தில் மாகாளி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ், மனோகரன் ஆகியோரை 9 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விக்னேஷ் (வயது 26) என்பவரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர். ஆனால் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மீதமுள்ள 8 பேர் தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கோவில் வளாகத்தில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவிழாவின் போது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒருவரை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர்.
எனவே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மீதமுள்ள 8 பேரை கைது செய்ய வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் கோவில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னரும் போலீசார் கைது செய்யவில்லை என்றால் உண்ணாவிரதம், சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதில் பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.