காட்டுத்தீயால் கடும் புகை மூட்டம் சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தம்

காட்டுத்தீயால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டதால், சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

Update: 2019-02-24 23:00 GMT
ஏற்காடு,

சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது வறட்சியின் காரணமாகவும், கடும் வெயில் அடிப்பதாலும் சேலம் - ஏற்காடு மலைப்பாதையில் செடி, கொடிகள் காய்ந்து உள்ளன.

கடந்த 22-ந்தேதி மாலை ஏற்காடு மலைப்பாதையில் திடீரென தீப்பிடித்தது. 60 அடி பாலத்தில் இருந்து 12-வது கொண்டை ஊசி வளைவு வரை இடையே உள்ள மலைப்பாதையோரத்தில் இருந்த செடி, கொடிகள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் புகை மூட்டமாக காட்சி அளித்தது. இதையறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமளவென பரவியதால் அணைக்க முடியவில்லை. நேற்று முன்தினம் 2-வது நாளாக காட்டுத்தீ தொடர்ந்து எரிந்தது. தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

ஏற்காடு அடிவாரத்தில் உள்ள உயிரியல் பூங்கா பச்சைபசேல் என்று ரம்மியமாக காட்சி அளிக்கும். கடந்த சில நாட்களாக அடித்து வரும் கடுமையான வெயிலின் காரணமாக இந்த பூங்காவின் அருகே மரங்கள் காயத்தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அங்கு சில மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனம் மூலம் அங்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் மளமளவென்று தீ பரவியது. அதை அணைக்க முடியவில்லை. இதனால் இரவிலும் அந்த பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினரும், வனத்துறையினரும் கடுமையாக போராடி வருகிறார்கள். தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றுள்ளனர். இதேபோல் வனத்துறையினர் செடிகளை வெட்டி தீ மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்று சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த மரங்கள் விழுந்தன. இதேபோல் கற்களும் பெயர்ந்து மலைப்பாதை ரோட்டின் குறுக்கே விழுந்தன. மலைப் பகுதி மற்றும் சாலையில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் முன்னால் செல்லக் கூடிய வாகனங்கள் எதுவும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து சேலம் அடிவாரத்தில் இருந்து ஏற்காட்டுக்கு நேற்று மதியம் 1 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வாகனங்கள் குப்பனூர் வழியாக ஏற்காட்டுக்கு திருப்பி விடப்பட்டது. எனவே அந்த வழிப்பாதையில் பஸ்,கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். தொடர் காட்டுத்தீ காரணமாக அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக ஏற்காட்டில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் ஏற்காடு அடிவாரம் பகுதியில் மது மற்றும் புகை பிடித்து கொண்டிருந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி புதுரெட்டியார் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த் (வயது 36), ஓமலூர் முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (34), கள்ளக்குறிச்சி டெலிபோன் காலனியை சேர்ந்த அன்பழகன் (26) ஆகிய 3 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்