புதுப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்

புதுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க வீரர்கள் மல்லுக்கட்டினர். காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர்.

Update: 2019-02-24 23:00 GMT
மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த புதுப்பட்டியில் சந்தியாகப்பர் ஆலய திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கிராம மக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தண்ணீர்குடம் எடுத்து வாடிவாசல் வந்ததும், சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை.

பின்னர் உள்ளூர் காளைகளும், அதைத்தொடர்ந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சில காளைகள், அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் விரட்டியடித்தன. மேலும் சில காளைகள் திமிலை பற்றிய வீரர்களை முட்டித்தூக்கி வீசின. இதனால் ஜல்லிக்கட்டு களைகட்டியது. இருப்பினும் வீரர்கள், காளைகளுடன் மல்லுக்கட்டி பல காளைகளை அடக்கினர்.

வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், மிக்சி, கிரைண்டர் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் 675 காளைகளும், 324 வீரர்களும் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் மாட்டின் உரிமையாளர் உள்பட 13 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இருப்பினும் ஏராளமான மக்கள் வந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். 

மேலும் செய்திகள்