செஞ்சி அருகே பரிதாபம் கொதிக்கும் சாம்பார் கொட்டி 8 மாத குழந்தை சாவு

செஞ்சி அருகே கொதிக்கும் சாம்பார் கொட்டி 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2019-02-24 23:00 GMT
செஞ்சி,

திண்டிவனம் அருகே உள்ள மேல்பேரடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி நித்யா(வயது 24). இவர்களுக்கு கனிஷ் என்ற 8 மாத ஆண் குழந்தை இருந்தது. கடந்த 20-ந்தேதி நித்யா தனது கைக்குழந்தையுடன் செஞ்சி அடுத்த கீழ்பாப்பாம்பாடியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த நித்யா, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சம்பாரை பாத்திரத்துடன் எடுத்து கீழே வைத்து விட்டு, மீண்டும் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த குழந்தை எதிர்பாராதவிதமாக சாம்பார் பாத்திரத்தின் மீது தவறி விழுந்து விட்டது.

இதில் கொதிக்கும் சாம்பார் கொட்டியதில் குழந்தையின் உடல் வெந்து போனது. வலியால் அலறி துடித்த தனது குழந்தையை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நித்யா சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த குழந்தை மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்