ஜெருசலேம் புனிதப்பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் அரசின் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட நிர்வாகம் தகவல்

ஜெருசலேம் புனிதப்பயணம் செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள் தமிழக அரசின் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2019-02-23 23:30 GMT

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால், நபர் ஒருவருக்கு ரூ.20ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இந்த புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.

புனிதப் பயணம் அடுத்த (மார்ச்) மாதத்தில் தொடங்கி ஜூன் மாதம் வரை பல்வேறு குழுக்களாக மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவற்றை இணையதள முகவரியில் காணலாம்.

விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்கள் புனித பயணத்திற்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலசமகால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (மார்ச்) 15–ந்தேதி மாலை 5.45 மணிக்குள் கொடுக்க வேண்டும். எனவே மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உடனே விண்ணப்பித்து பயனடையாலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்