திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தது: குழந்தைக்கு கண் பார்வை கோளாறால் தொழிலாளி தற்கொலை

திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு கண் பார்வை கோளாறு இருப்பதாக டாக்டர் கூறியதால் மனம் உடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-02-23 22:30 GMT
பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டை அண்ணாநகர் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 30). இவர், அதே பகுதியில் சில்வர் பாத்திரம் தயாரிக்கும் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கவிதா(வயது 26).

இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் தவித்தனர். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அதன் பலனாக கவிதாவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதனால் கணவன்-மனைவி இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தையை பாசமாக வளர்த்து வந்தனர்.

கண் பார்வை கோளாறு

குழந்தையை மாதம்தோறும் டாக்டரிடம் பரிசோதனைக்கு எடுத்துச் சென்று வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், குழந்தைக்கு கண் பார்வை கோளாறு இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு, கண் பார்வை கோளாறு என்று கேள்விப்பட்டதும் கணவன்-மனைவி இருவரும் மனம் உடைந்தனர்.

பெண் குழந்தை என்பதால், அதன் எதிர்காலம் குறித்து முத்து மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் வேலைக்குகூட செல்லாமல் 2 நாட்களாக வீட்டில் இருந்து வந்த முத்து, நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குடிபோதையில் தனது வேட்டியால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெளியே சென்று இருந்த அவரது மனைவி கவிதா, வீட்டுக்கு வந்தபோது தனது கணவர் முத்து தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆர்.கே.நகர் போலீசார் முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்