அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் 3 துருவங்களாக செயல்படும் ஆரணியில் திருமாவளவன் பேட்டி
அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய 3 கட்சிகள் 3 துருவங்களாக செயல்படும் என்று ஆரணியில் திருமாவளவன் கூறினார்.
ஆரணி,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆரணிக்கு நேற்று வந்தார். அவரை நகர எல்லையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.சிவானந்தம், நகர செயலாளர் ஏ.சி.மணி, ம.தி.மு.க. மாநில நிர்வாகி எம்.அரசுபிரபாகரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொது செயலாளர் உதயகுமார், முன்னாள், இந்நாள் நகர தலைவர்கள் சம்மந்தம், டி.ஜெயவேல் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் தொகுதி பொறுப்பாளர் முத்து இல்லத்தில் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடுமையாக, அநாகரீகமாக விமர்சித்தவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக நாடகம் ஆடுகிறார்கள். தைலாபுரத்தில் தடபுடல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டன. அ.தி.மு.க.வை விட அடுத்த பெரிய கட்சி பா.ம.க. என்று கூறி அதிக தொகுதிகளை கேட்டு பெற்றுள்ளது. இதனை பா.ஜ.க. வரவேற்கவில்லை.
மேலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்று சொல்லக்கூடாது என்பதற்காக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா வருகை தந்து தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி என்று சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.
அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. ஆகிய 3 கட்சிகளும் 3 துருவங்களாக செயல்படும். ஒருமித்த கருத்து இருக்காது. இவை அனைத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வருவது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார். எங்களது கூட்டணி இரண்டொரு நாட்களில் முடிவாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.கே.பாஸ்கரன் உள்பட நிர்வாகிகள் இருந்தனர்.